குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை மூண்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லி, உத்தரப்பிரதேசம் எனப் பல்வேறு மாநிலங்களில் பரவி உள்ளது. போராட்டம் காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் செல்போன் இணையதள வசதி துண்டிக்கப்பட்டது.
இதே போல், உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அங்கு ஒரு கும்பல் பல வாகனங்களுக்கு தீ வைத்தது. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. அதே நேரம், மீரட், முசாபர்நகர் உள்பட பல பகுதிகளில் வன்முறையாளர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
ஜான்பூரில் போராட்டம் நடைபெற்றபோது ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். லக்னோ, பெரோசாபாத், கோரக்பூர், பதோஹி, சாம்பல் உள்பட பல பகுதிகளில் போராட்டக்காரர்கள், காவல்துறையினர் மீது கற்களை வீசினார்கள். காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் அவர்களை விரட்டியடித்தனர். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.
Discussion about this post