உதகையில், விடுதிகளின் கட்டணம் அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை அடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகையில், தற்போது கோடை சீசன் நடைபெற்று வருகிறது. இதனால், அங்குள்ள தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 ஆம் தேதி வரை நாள்தோறும் சுமார் 25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், தற்போது 6 ஆயிரத்திற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, வரும் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பாரம்பரியமிக்க மலர் கண்காட்சி நடைபெற இருப்பதாகவும், இதனால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகையை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிகளில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.