இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் பட்டங்களைப் பயன்படுத்தமாட்டார்கள், மக்களின் வரிப்பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் அரச குடும்பத்தின் பங்கும் இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசினுடைய ஓர் அங்கமாகவே கருதப்படுகிறார்கள்.
இந்த நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் ராஜ வாழ்க்கை வேண்டாம் என்றும் தனியாக சுதந்திரமாக வாழ விரும்புவதாகவும், தங்களுக்கு எவ்வித பதவியும் சொத்தும் வேண்டாம் என்று இருவரும் சமீபத்தில் அறிவித்தனர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இளவரசர் சார்லஸ் அழைப்பின் பெயரிலும் எலிசெபத் ராணி முன்னிலையில் ஹாரி, அவரின் மனைவி மேகன் ஆகியோர் பேச்சு நடத்தினர். ஆனால் அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் அவர்களை அரச குடும்ப கடமைகளில் இருந்து விடுக்க முடிவு எடுத்தனர். பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பின் படி இளவரசர் ஹாரியும், அவரின் மனைவி இளவரசி மேகன் மார்கலும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாகக் கருதமாட்டார்கள். அவர்கள் இருவரும் அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி எனும் பெருமைக்குரிய பட்டத்தை இனிமேல் வைத்திருக்கமாட்டார்கள். மக்களின் வரிப்பணத்தையும் இருவரும் இனிமேல் பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
தங்களின் குடும்ப இல்லமான பிராக்மோர் காட்டேஜ் புனரமைக்கும் பணிக்காக மக்களின் வரிப்பணமாக ரூ.22 கோடியே 19 லட்சம் பணமாக (24 லட்சம் பவுண்ட்) பெற்றதையும் திரும்பித் தருவதாக அறிவித்தனர்.
ஹாரி, மேகன் ஆகியோருடன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பலகட்டங்களாகப் பேச்சு நடத்தியபின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹாரி, மேகன் இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
இருப்பினும், குடும்பத்தின் ஆதரவு ஹாரிக்கும், மேகனுக்கும் தொடர்ந்து இருக்கும். இருவரும் குடும்பத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களாகவே இருப்பார்கள்.
ராணி எலிசபத் தன்னுடைய அறிக்கையில், கடந்த இரு ஆண்டுகளாக அவர்கள் தீவிரமாக ஆலோசித்ததையும், அனுபவித்த சவால்களையும் உணர்கிறேன், அவர்கள் சுதந்திரமாக வாழ ஆதரவு தருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குறிப்பாக மேகன் எங்கள் குடும்பத்துக்குள் இணைந்தது பெருமையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஹாரி, மேகன் இருவரும் அமைதியான, மகிழ்ச்சியான புதிய வாழ்க்கையை தொடங்குவார்கள் என்று நம்புவதாகவும் எலிசபத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இனிமேல் அரண்மனை கட்டுபாடுகள் இல்லாத சுதந்திர பறவைகளாக ஹாரியும் அவரது மனைவி மேகனும் வாழ்வை தொடங்கியுள்ளனர்.
Discussion about this post