இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில், ஐந்து விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி இன்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ரிஷப் பண்ட் 19 ரன்களிலும், ரகானே 46 ரன்களிலும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமாலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் இந்திய அணி 165 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 11 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்துவீச்சில், லாதம் ஆட்டமிழந்தார். பிளெண்டல் 30 ரன்களிலும், டெய்லர் 44 ரன்களிலும் வெளியேறினர். எனினும் கேப்டன் வில்லியம்சன் பொறுமையாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னரே முடிக்கப்பட்டது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி 71.1 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. வாட்லிங் 14 ரன்களுடனும், கிராண்ட்ஹோம் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதன்மூலம், இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.