2020 ஆங்கிலப்புத்தாண்டு வண்ண மயமாக துவங்கியுள்ளது. உலகம் முழுக்க, பொதுமக்கள் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலைகளில் இளைஞர்கள் விடிய விடிய உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இளம்பெண்கள், சிறுவர்கள் கூட வாகனங்களில் உற்சாகத்துடன் வலம் வந்ததை காணமுடிந்தது. கடற்கரை சாலையில் கேக் வெட்டியும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.
பாதுகாப்பான முறையில் புத்தாண்டு கொண்டாடப்படுவதை உறுதிசெய்யும் வகையில், போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டிருந்தனர். மெரினாவில் காந்திசிலை முன்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.
சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட கிறித்துவ தேவாலயங்களில் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கடற்கரை சாலைகளில் இருக்கும் ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகளிலும் விடிய விடிய கொண்டாட்டங்கள் களைகட்டின. இதே போல கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின. மதுரை, கோவை நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதி கொண்டாட்டங்களில் திரைநட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் தான் என்றில்லை, ராணுவ முகாம்களில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டியது.