தனது பிள்ளைகளுக்காக தங்கள் முழு வாழ்வையுமே தியாகம் செய்யும் பெற்றோர்கள் பலர், தங்கள் இறுதிக் காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்படும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தங்களுக்கென யாரும் இல்லாத சூழலில், உடல்நலக் கோளாறுகளும் மன அழுத்தமும் வறுமையும் அவர்களை வாட்டுகின்றன. இதனால் அவர்களின் இறுதிக் காலம் துன்பங்களால் சூழப்பட்டதாக மாறுகின்றது. கைவிடப்பட்ட சில பெற்றவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளையும் எடுக்கின்றனர்.
பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கைவிடும் வாரிசுகளுக்கு எதிராக, புதிய சட்ட வரைவு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்கள் கைவிடப்படுவது குறித்த புகார்கள் தொடர்ச்சியாக பிரதமர் அலுவலகத்தை எட்டியதன் விளைவாக, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சமூக நலம் மற்றும் அதிகார வழங்கல் துறைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி புதிய சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப் புதிய வரைவு அமலுக்கு வந்தால், 2007 ஆம் ஆண்டின் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் இன்னும் கடுமையாக்கப்படும். இப்போது பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் 3 மாத சிறை தண்டனையானது அதன் பின்னர் 6 மாதங்களாக உயர்த்தப்படும்.
மேலும், இப்போதுள்ள சட்டத்தின் படி பெற்றோரைப் பராமரிக்கும் கடமை அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமே உள்ளது. புதிய வரைவின்படி இந்த வரையறை மாற்றப்பட்டு, தத்தெடுத்த குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள் ஆகியவர்களும் முதியோர்களைப் பாதுகாக்கும் கடமை உள்ளவர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.
மேலும் பெற்றோருக்கு பராமரிப்புத் தொகை மட்டும் வழங்கும் பிள்ளைகளிடம் இருந்து பெற்றோர்கள் இப்போது 10 ஆயிரம் வரையிலான தொகையை மட்டுமே பெற இப்போதுள்ள சட்டம் உதவுகின்றது. இந்நிலையில், நல்ல ஊதியம் பெறும் பிள்ளைகளிடம் இருந்து இன்னும் கூடுதலான தொகையைப் பெற்றோர்கள் பெறவும் புதிய வரைவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.