வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்காகவே புதிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாக என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யவும், வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும் பல அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீட்டு வசதி ஆகிய துறைகளுக்கும் எளிதில் கடனுதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, நபார்டு, இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி ஆகியவற்றுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதில், நபார்டு வங்கிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயும், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும், தேசிய வீட்டு வசதி வங்கிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் 3.75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், வாராக் கடன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கான அவகாசம் 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post