“அல்சைமர்” முதுமையினால் வரும் மறதி சம்பந்தமான வியாதி. சாதாரணமாக இதை வயோதிகத்தால் வருவது தானே என்று ஒதுக்கி வைத்துவிட முடியாது, சமீபத்தில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த நோய்க்கான தீர்வு என்று ஒன்றில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நரம்பியல் குறைபாடாக ஆரம்பித்து தன்நிலை மறக்க செய்யும் அல்சைமர் நோயினால் உயிரழப்பு ஏற்படும் என்று 1906-ல், உலகம் அறிந்த தினம் இன்று…
சிறுக சிறுக மூளையில் உயிரணுக்களை சிதைவடைய செய்து, ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு ஆகியவற்றை அல்சைமர் ஏற்படுத்துகிறது
அல்சைமர் நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடந்த கால சம்பவங்கள் சிலவற்றை மறந்து போவதில் இருந்து ஆரம்பித்து, சமீபத்தில் நம்மை சுற்றி நடந்த நிகழ்வுகளையும் மறக்கடிக்க செய்யும். குறிப்பாக சுற்றி இருப்பவர்கள், நெருக்கமானவர்களின் பெயர்களைக் கூட மறக்க செய்யும் வியாதிதான் இது.
அல்சைமர் நோய் குணமடைய வாய்ப்பில்லை என்றாலும், ஆரம்பத்திலேயே நோய்க்கான அறிகுறிகளை கண்டறிவதின் மூலம் நோயை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க முடியும்.
மருந்து, உளவியல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் அல்சைமரை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்றாலும், குடும்பம் மற்றும் சுற்றி இருப்பவர்களின் ஆதரவு அணுகுமுறையே இந்த நோய் வந்த முதியவர்களுக்கு அருமருந்தாக இருக்கும்.
அல்சைமருக்கான காரணங்கள் :
அல்சைமருக்கு இதுதான் காரணம் என்று உறுதிபட தெரியவில்லை என்றாலும்
* மூளையின் பக்கவாட்டு பகுதியில் உண்டாகும் டிமென்ஷியா நோயும் ஒரு காரணம்.
* வயோதிகம் முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது.
இவை மட்டுமின்றி தலையில் அடிபடுவது, டவுண் சிண்ட்ரோம் (down syndrome) காரணங்களாலும் கூட இந்நோய் வரலாம்.
ஆரம்பகால அறிகுறிகள் :
* மனநிலையில் மாற்றங்கள்
* சமீபத்திய விசயங்களை கூட மறந்துபோதல்
* எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பதில் குழப்பம்,
* தேதி, கிழமைகளில் சந்தேகம்
* தன்னுடைய உடல், உடமைகளில் கூட கவனம் செலுத்தாது.
* தனிமைப் படுத்திக் கொள்ளுதல்
அல்சைமரை கட்டுப்படுத்த மருந்து எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ , அந்த அளவிற்கு கீழ்கண்டவற்றை பின்பற்றுவதும் அதிமுக்கியமே;
* மன அழுத்தம் இல்லாமல் இருப்பது
* எப்போதும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது
* நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது
* உடலையும் மனதையும் தூய்மையாக வைத்திருப்பது
* மற்றவர்களிடம் நம் விசயங்களை பகிர்ந்து கொள்வது
மனப் பயிற்சி, உடற்பயிற்சி , ஆகியவையும் நோய்க்கான தீவிரத்தை கட்டுபடுத்த உதவும்.
நம் வீட்டு வயதானோர்களை கண்காணிப்பதும் அவர்களுக்கு தேவையான விசயங்களை உடனிருந்து செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மீறி அவர்களை நம் அருகில் வைத்து பராமரிப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மன, உடல் மாற்றங்களை உடனே அறிந்துக் கொண்டு சிகிச்சை அளிக்கவும் முடியும்.
இன்றைய சமூதாய சூழலில் வயோதிகர்களும் அவர்களின் ஆரோக்கியமும் நம் ஒவ்வொருவரின் கடமை!
Discussion about this post