நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த புகாரில் மாணவன் உதித் சூர்யாவையும், அவரது பெற்றோரையும் திருப்பதியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். நீட்தேர்வு நுழைவுச்சீட்டில் உள்ள படத்துக்கும் இவர் தோற்றத்துக்கும் பெரிய வேறுபாடு இருந்ததை அடுத்து உதித் சூர்யாவிடமும் அவர் பெற்றோரிடமும் மருத்துவக் கல்லூரி முதல்வர் விசாரணை மேற்கொண்டார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்ததையடுத்தக் கண்டமனூர் விலக்கு காவல்நிலையத்தில் கல்லூரி முதல்வர் புகார் அளித்தார்.
இதையடுத்து ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் உதித்சூர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே உதித்சூர்யா கல்லூரிக்குச் செல்லாமல் தலைமறைவானார். அவரைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் முன்ஜாமின் கோரி உதித்சூர்யா சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிபிசிஐடி காவல்துறை முன் சரணடைய உத்தரவிட்டார். இந்நிலையில் திருப்பதியில் உதித்சூர்யா, அவர் தந்தை வெங்கடேசன், தாய் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர். சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post