சின்னத்தம்பிக்கு மருத்துவக் குழுவினர் மயக்கஊசி செலுத்தியுள்ளனர். ஆனாலும் சின்னத்தம்பி மயக்கமடையாமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது .
திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கடந்த 15 நாட்களாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. அங்குள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்களை உண்டும், கும்கி யானைகளுடன் விளையாடியும் அது பொழுது போக்கி வருகிறது. இந்த யானையை பிடிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், சின்னத்தம்பியை பிடித்து முகாமிற்குள் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்தம்பி யானையை முகாமில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, அதை மயக்கஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், சின்னத்தம்பியை பிடிக்கும் பணியில் இன்று அதிகாலை முதலே வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கண்ணாடிப்புத்தூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவற்றின் துணையுடன், புதருக்குள் இருக்கும் சின்னத்தம்பியை வெளியில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சின்னத்தம்பிக்கு மருத்துவக் குழுவினர் மயக்கஊசி செலுத்தியுள்ளனர். ஆனாலும் மயக்க மடையாமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது சின்னத்தம்பி.
இதையடுத்து, கும்கி யானைகளின் உதவியுடன், அதனை லாரியில் ஏற்றி கோழிக்கமுது என்ற இடத்தில் பாதுகாப்பாக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சின்னத்தம்பி ஆரோக்கியமாக உள்ளதாக தலைமை வன பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.சின்னத்தம்பியை பிடிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து, அந்தப் பகுதியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
Discussion about this post