மேகாலயா சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 15 தொழிலாளர்களை மீட்க கடற்படையினர் தீவிர நடவடிக்கை

மேகாலயாவில் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையாக, ஆழத்தை அறியும் வகையில் கடற்படை வீரர்கள் சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர்.

மேகாலயாவில் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட சுரங்கம் ஒன்றில் கடந்த 13-ம் தேதி பணியாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அருகில் இருந்த லைடெயின் ஆற்றில் இருந்து சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து சுரங்கத்திற்குள் 15 பணியாளர்கள் சிக்கினர்.

தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் உடனடியாக ஈடுபட்ட போதிலும், சட்டவிரோதமாக செயல்பட்ட சுரங்கம் என்பதால், அதன் வழிகள் குறித்து தெரியாமல், மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடற்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒடிசாவில் இருந்து 10 ராட்சத மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு, நிலக்கரி சுரங்கத்திற்குள் புகுந்திருக்கும் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுரங்கத்தின் ஆழம் குறித்து அறிந்து மீட்புப்பணியை தொடரும்வகையில் கடற்படையை சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர். இவர்கள் நீரில் 100 அடி ஆழம் வரையில் சென்று ஆழத்தை அறியும் திறனுடையவர்கள்.

இதனிடையே, இரண்டு வாரங்களாக சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் நிலை குறித்து அறியமுடியாத நிலையில், கடற்படை வல்லுனர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர் என சுமார் 200 பேர் மீட்பு பணிக்காக அங்கு தயார் நிலையில் உள்ளனர்.

Exit mobile version