சில பாடல்களை கேட்டால் நம்மையே மறந்து சிலாகிக்கும் வகையில், அந்த பாடலின் பின்னணி குரல் அப்படியே வசீகரிக்கும். அப்படிப்பட்ட மாயக்குரலுக்கு சொந்தக்காரர் “சித் ஸ்ரீராம்”. நவீன பாகவதராக வலம் வந்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் மனதை வருடிக்கொண்டிருக்கும் அவரது பிறந்தநாள் சிறப்புத்தொகுப்பை காணலாம்…
இசை குடும்பத்தில் பிறந்ததால் இசையுடனே வளர தொடங்கியவர், அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள பெர்க்லீ இசைக்கல்லூரியில் பயின்றார். 2010ல் சொந்தமாக பாடல்கள் எழுதி, இசையமைத்து அதனை வீடியோவாகவும் வெளியிட்டு வந்தார்.
இவரது இசை வீடியோக்களை பார்த்த ஏ.ஆர்.ரகுமான் 2011ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் “அடியே…அடியே” பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். மீண்டும் “ஐ” படத்திற்காக “என்னோடு நீ இருந்தால்” பாடலை பாடினார். காதலை வெளிப்படுத்தும் வகையில் அவர் உருகி பாடும்போது சொக்கித்தான் போனார்கள் சினிமா ரசிகர்கள்.
“நானும் ரௌடி தான்“ படத்தில் இடம்பெற்ற “எனை மாற்றும் காதலே“, 24 படத்தில் “மெய் நிகரா“, “கட்டப்பாவை காணோம்” படத்தில் வந்த “ஹே பெண்ணே..பெண்ணே“ ஆகியன, சித் ஸ்ரீராமின் ரசிகர் வட்டத்தை விரிவுப்படுத்தியது…
சித் ஸ்ரீராமுக்கு மகுடமாக அமைந்த பாடல் “அச்சம் என்பது மடமையடா“ படத்தில் இடம்பெற்ற “தள்ளிப்போகாதே” பாடல்.
டிக்..டிக்..டிக் படத்தின் “குறும்பா“ பாடலும், விஸ்வாசம் படத்தின் “கண்ணான கண்ணே“ பாடலும் பெற்றோர்களை புல்லரிக்க வைத்தன…
எனை நோக்கி பாயும் தோட்டாவில் இடம் பெற்ற “மறுவார்த்தை பேசாதே”, பியார் பிரேம காதலில் “ஜன்னல் ஓரமாய்”, “OMG பெண்ணு”, “இந்திரலோகத்து சுந்தரியே”, தடம் படத்தில் “இணையே” ஆகிய பாடல்கள் மூலம் காதலர்களின் ஐகானாகவே மாறிப்போனார் சித் ஸ்ரீராம்..
டியர் காம்ரேட் படத்தின் “புலராத காலை“, கடாரம் கொண்டான் படத்தின் “தாரமே தாரமே“, ஆதித்யா வர்மா படத்தின் “ஏன் என்னை பிரிந்தாய்“, என்.ஜி.கே. படத்தில் “அன்பே…பேரன்பே” போன்ற பாடல்களில் சொக்கி போன ரசிகர்களை, வடசென்னை படத்தின் “என்னடி மாயாவி நீ” பாடல் மூலம் கிரங்க வைத்தார்…
மணிரத்னம் தயாரிப்பில் “வானம் கொட்டட்டும்“ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார் சித் ஸ்ரீராம்.. மறுபுறம் சைக்கோ படத்தின் “உன்ன நெனச்சு நெனச்சு“, ஓ மை கடவுளே படத்தின் “கதைப்போமா“, மாறா படத்தின் “யார் அழைப்பது“, டெடி படத்தின் “என் இனிய தனிமையே“ என தொடர்ந்து ரசிகர்களை தன் பிடியில் வைத்துள்ளார் சித்…
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இவரின் கீதம் ஒலிக்கிறது… தெலுங்கில் “கீதா கோவிந்தம்” படத்தில் இடம்பெற்ற “இங்கேம் இங்கேம் காவாலே” பாடலுக்கு மொழிப்பற்று கடந்த ரசிகர்கள் உண்டெனில், காரணம் சித் ஸ்ரீராம் மட்டுமே.
என்ன பாட சொல்லாதே நான் கண்டப்படி பாடிபுடுவேன்.. என்ற வரிகளுக்கு முழுவதுமாக பொருந்தி போக கூடியவர் சித் ஸ்ரீராம்..
Discussion about this post