நாடு முழுவதும் தேசிய மாசு கட்டுப்பாடு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம்.
உலகின் மிக மோசமான மாசுப் பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் போபால் விஷவாயுக் கசிவு, கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி நிகழ்ந்ததை எவராலும் மறக்க முடியாது. UCIL என அழைக்கப்படும் யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் பூச்சிக்கொல்லி ஆலையில் ஏற்பட்ட தொழிற்சாலை பேரிடரில் மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு வெளியாகி ஒரே இரவில் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்தனர். இவர்களது நினைவாகவே டிசம்பர் 2, தேசிய மாசு கட்டுப்பாடு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
காற்றில் உள்ள தூசி துகள்களின் அளவு 2 புள்ளி 5 மைக்ரோ மீட்டர் விட்டத்திற்கும் குறைவாக காணப்படும் இடங்கள் அதீத மாசடைந்த மண்டலமாக கருதப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றிருப்பது, நாம் அறிந்ததே. மக்கள் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, காற்று மாசு அடைவதை தவிர்க்க முடியும் எனக் கூறுகிறார் சூழலியலாளர் ஓசை காளிதாசன்…
சுற்றுபுறச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியாவில் பல்வேறு மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டங்கள் இருந்தபோதிலும், மக்களின் அலட்சிமே பெரும் பாதிப்பை ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் 1982ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அமைக்கப்பட்டு, 7 மண்டல அலுவலகங்கள் மற்றும் 38 மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 21 மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள 25 தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு குறித்து அறிந்து, அதனால் நம் வாழ்வில் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து பாதுகாப்பான உலகை உருவாக்குவது மக்களிடம் தான் உள்ளது.
Discussion about this post