மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகளின்படி மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்தும், தேர்தல் முடிவுகளை ஒட்டிய செயல்பாடுகள் குறித்தும், புதிய ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே, டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி செல்கிறார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நிறைவடைந்த பிறகு மத்திய அமைச்சர்கள் பங்கேறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post