சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மங்கள இசையில் மயக்கிய நாதஸ்வர கலைஞர், ஊரடங்கால் இழந்த தன் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க சப்பாத்தி வியாபாரத்தில் களம் இறங்கியுள்ளார்.
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் மங்கள இசை வாசித்து வருபவர் நாதஸ்வர கலைஞர் பிரபு சங்கர். திருத்தளிநாதர் ஆலயத்தில், இவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக நாதஸ்வரம் வாசித்து வருகின்றனர்.இசையால் வாழ்ந்த இவரது குடும்பத்திற்கு, சோதனையாய் வந்தது ஊரடங்கு. கோயில்கள் மூடப்பட்டதுடன், திருமண நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதால் வருமானம் இன்றி இவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
இந்நிலையில், ஊரடங்கை தனக்கு கிடைத்த நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக, சப்பாத்தி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்ட சப்பாத்திகள் விற்பனையாவதாகவும் இதனால் தனக்கு நல்ல லாபம் கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார் பிரபு சங்கர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 தலைமுறைகளாக மேற்கொண்டு வந்த இசைதொழில், தன்னைக் கைவிட்டாலும், உடனடியாக மாற்றுத் தொழிலை கையில் எடுத்த பிரபு சங்கர், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். மனது இருந்தால் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உள்ளது எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கும் பிரபு சங்கருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post