மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு அமையும் என்றும், பாஜக ஆட்சியால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து கொண்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பெரம்பலூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் சிலர் சிறையில் இருக்கிறார்கள் என்றும் சிலர் பெயிலில் இருப்பதாகவும் கூறினார். மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக நல்லதை கொடுத்தது என்றும், மீண்டும் மத்திய அரசு, நரேந்திர மோடி தலைமையில் அமையும் என்றும் கூறினர். பிரதமர் நரேந்திர மோடி அரசு ஏற்பட்ட பிறகு, உலகத்திலேயே இந்தியாவின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். புல்வாமா மாவட்டத்தில் ஆயுதப்படை வீரர்களை கொன்ற தீவிரவாதிகளை பழி வாங்கி இருப்பதை சுட்டிக் காட்டிய ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது என்றார். இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருந்த ஆயிரத்து 900 மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்தது மோடி அரசு என்றும் அவர் கூறினார். தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், அனைத்தையும் காக்க மத்திய அரசு பாடுபடும் என்று அவர் உறுதியளித்தார்.
Discussion about this post