ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரை தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டது.
செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், கொல்லிமலை மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த 18 குழந்தைகள், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆஜராகி விளக்கமளித்தார். கைதாகி உள்ள 8 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.