திருவள்ளூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதை அடுத்து, நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பலராமன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள சிறுவாக்கம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கொசஸ்தலை ஆற்றில் 17 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமூக விரோதிகள் சிலர் ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டார்களையும், குடிநீர் குழாய் மற்றும் 17 திறவுகோல் சக்கரத்தையும் உடைத்து சேதப்படுத்தியதோடு 5 இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனையடுத்து சேதமடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன், சேதமடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சரிசெய்து, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Discussion about this post