மர்மநபர்கள் கைவரிசை…வணிகர்கள் அச்சம் !

தூத்துக்குடி- எட்டையபுரம் மெயின்ரோட்டில் மாப்பிள்ளையூரணி விலக்கு அருகே உள்ள காம்ப்ளக்ஸில் மகேஷ் என்பவருக்குச் சொந்தமான தரணி ஸ்டுடியோ உள்ளது. காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த மகேஷ், கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. கடையில் இருந்த ஒரு கேமரா, போட்டோ தொழில்நுட்ப சாதனங்கள் என சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோயிருந்தது குறித்து சிப்காட் போலீசில் புகார் அளித்தார். ஸ்டுடியோவில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது மர்மநபர்கள் உள்ளே நுழைந்து திருடும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்களை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த பொன் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான ஸ்டுடியோவிலும் திருட்டு போயிருப்பதாக முத்தையாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடையின் பூட்டை உடைத்து ஸ்டூடியோவுக்குள் புகுந்த மர்மநபர்கள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போட்டோ தொழில்நுட்ப சாதனங்களை திருடிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாள் இரவில் 2 ஸ்டூடியோக்களில் அரங்கேறிய இந்த கொள்ளைச்சம்பவம் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் முறையான ரோந்து பணியை மேற்கொள்ளாததால்தான் இத்தகைய திருட்டுகள் நடந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ள வணிகர் சங்கத்தினர், உடனடியாக மர்ம நபர்களை கைது செய்து அச்சத்தை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version