திருப்பதி கோயிலில் உள்ள லட்டு மையத்தில் கைவரிசை காட்டிச் சென்ற மர்மநபர்!

ஓவ்வொரு ஊருக்கும் ஒரு உணவுபொருள் பிரபலம். அந்த வரிசையில் திருப்பதி என்றால் அனைவரின் நினைவுக்கு வருவதும் லட்டுதான். திருப்பதி கோயில் செல்பவர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப் படுவதோடு, தனிப்பட்ட தேவைக்கு லட்டு வாங்குபவர்களுக்காக, கோவில் அருகில் உள்ள லட்டு விநியோக மையத்தில் 50க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள 36வது கவுண்டரில் லட்டு விநியோகம் செய்து கொண்டிருந்தவர் இரவில் விநியோகத்தை நிறுத்திவிட்டு அசந்து தூங்கியுள்ளார். அதிகாலை 5மணி அளவில் எழுந்து பார்த்தபோது லட்டு விற்பனை செய்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சியினை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் லட்டு விநியோக கவுண்டருக்குள் நுழைந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் 2லட்சம் ரூபாயை திருடி திருப்பதிக்கே அல்வா கொடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திருப்பதி கோயிலில் நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவம் பக்தர்களிடையேயும், கோயில் நிர்வாகிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version