இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. வீரமிகு வரலாற்றை விட்டுச் சென்ற அவரது இறப்பு குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. 1940களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கு எதிராக வீரத்தோடு போரில் ஈடுபட்டிருந்த நேதாஜி 1945க்கு பிறகு என்ன ஆனார்? என்ற கேள்விக்கு இன்றளவும் பதில் இல்லை. 1945ஆம் ஆண்டு இதே நாளில், தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் நேதாஜி சிங்கப்பூர் புறப்பட்டார். எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் மஞ்சூரியா என்ற இடத்தில் தரையிரங்கிய அந்த விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் நேதாஜி உயிரிழந்தார். ரஹ்மான் உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினர் என்பது தான் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல். அதற்கு முன்பும் பலமுறை நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டிருக்கின்றன. நேதாஜியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவரும், அவரால் ஆரம்பிக்கப்பட்ட பார்வர்ட் பிளாக்கின் தமிழக தலைவருமாக இருந்த பசும்பொன் முத்துராம லிங்க தேவர் “விமான விபத்து ஏதும் நடக்கவில்லை என்றும் இது திட்டமிட்ட நாடகம் என்றும் அறிக்கை கொடுத்தார். சர்ச்சைகள் தொடரவே 1956-ல், ஐ.என்.ஏ-யில் லெஃப்டினென்டாக இருந்த ஷாநவாஸ் கான் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஓராண்டுக்குள் விசாரணையை முடித்த ஷாநவாஸ் கான், நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக 1957-ல் அறிக்கை சமர்ப்பித்தார். “விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் மஞ்சூரியாவுக்கே போகாமல், அறைக்குள் உட்கார்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஏற்க முடியாது” என ஃபார்வர்டு பிளாக் மட்டுமல்லாமல், காங்கிரஸில் இருந்த நேதாஜி அபிமானிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் பிறகு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட கோஸ்வாமி ஆணையமும் நேதாஜி இறப்பை உறுதிசெய்தது. 1999-ல் பா.ஜ.க. ஆட்சியில் மீண்டும் எம்.கே. முகர்ஜி என்பவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 2005ல் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த முகர்ஜி கமிஷன், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை எனவும், அவர் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றிருக்க வாய்ப்பு இருந்ததாகவும் தெரிவித்தது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்த தெளிவான முடிவு வரவில்லை. இந்திய சுதந்திரத்தின் போது சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நேதாஜி ரஷ்யாவில் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பாக 33 கோப்புகளை பாதுகாத்து வைத்துள்ள மத்திய அரசு அதிலுள்ள விவரங்களை வெளியிட மறுத்து வருகிறது. அத்தகவல் வெளிவந்தால் இந்தியா நெருக்கமான ராஜ்ய உறவுகளை கடைபிடிக்கும் நாடுகள் மீது , இந்திய மக்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் தகவல்களை வெளியிட மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அவரது இறப்பு மர்மமான ஒன்றாக இருந்தாலும், “சிறிது ரத்தம் தாருங்கள். நிறைய சுதந்திரம் தருகிறேன்” என கர்ஜித்து, 2-ம் உலக போரில் பிரிட்டன் அரசை ஆட்டம் காண செய்த நேதாஜியின் தியாகம் இன்றும் மக்கள் மனதில் உள்ளது.
Discussion about this post