என் பணி, நாட்டை காப்பது மட்டும் அல்ல நாட்டை காக்க என்னை உருவாக்கிய என் மாவட்டத்தை காப்பதும் என் பணிதான் என்று கூறும் கன்னியாகுமரி மாவட்ட ஜவான்ஸ் குறித்த செய்தி தொகுப்பை காணலாம்…
கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பு மூலம் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சமூக பணிகளுக்கு அரசு தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. என் தேசம் என் பணி என கூறும் கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு,.. இயற்கை, விவசாயம், ஆன்மீகம் என பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் தேசத்தை காக்கும் ராணுவ வீரர்களை உருவாக்குவதில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. தற்போது குமரியில் இருந்து மூன்றாயிரத்து 800 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் எல்லையில் பணியாற்றி வருகின்றனர்.
தேர்வு செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் தேசத்தில் எல்லையை பாதுகாத்து வரும் நிலையில், சுழற்சி முறையில் விடுமுறையில் வரும் ராணுவ வீரர்கள் மாவட்டத்தை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குமரிமாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தொடக்கத்தில் 230 ராணுவ வீரர்களை கொண்ட இந்த அமைப்பில் தற்போது மூன்றாயிரத்து 700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஒரு வாட்ஸ்அப் குரூப் மூலம் விடுமுறையில் வரும் வீரர்களை ஒன்றிணைத்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விடுமுறையில் வரும் வீரர்களை கொண்டு நாள் முழுவதும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொள்வது இந்த அமைப்பின் பணியாக உள்ளது.
சுகாதாரம் மிக்க குமரி என்பது இந்த அமைப்பின் நோக்கம், சாலையை சீரமைத்தல், சுகாதாரம் ஏற்படுத்துதல், தண்ணீர் வசதி, இலவச மருத்துவம், இலவச கல்வி என நீண்டு கொண்டே செல்கிறது, இவர்களின் சமூக பணி. தங்களது ஊதியத்தில் ஒரு பகுதியை இந்த பணிகளுக்காக ஒதுக்கி விடுகின்றனர். இவர்களின் சமூக பணி தற்போது மக்கள் மத்தியில் எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு பகுதிகயிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும் போது அப்பகுதியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற ராணுவ வீரர்களின் பணிகள் தனி சிறப்பாக அமைகிறது. இது மட்டுமின்றி ஆபத்து காலங்களில் காவல்துறை, மீட்பு பணி துறையினருடன் சேர்ந்து பணியாற்றுவது, களப்பணியில் ஈடுபடுவது போன்ற முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது குமரியில் தொடங்கி உள்ள இந்த விழிப்புணர்வு பணி, தேசம் முழுவதும் ஏற்பட்டால், நிச்சயம் வளமான, சுகாதாரமான இந்தியா உருவாகும் என கூறும் அவர்கள், தாங்களும் ராணுவ வீரர்களுடன் இணைந்து சேவை செய்வோம் என்றும் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post