சமூகம் மற்றும் மத நல்லிணக்கம் என்ற அடிப்படையில் 1919 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஜமாது உலாமா-எ-ஹிந்த் அமைப்பு. இந்தியாவின் பழமையான இசுலாமிய அமைப்பாக இது கருதப்படுகிறது. இதன் 34வது மாநாடு புதுடெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைப்பின் தலைவர் மவுலானா மஹமூத் மதானி தலைமை உரை ஆற்றினார். அப்போது அவர், இஸ்லாம் மதம் இந்தியாவில் தோன்றியதுதான், வெளிநாட்டிலிருந்து வரவில்லை என்று கூறினார். மேலும் பாரத பிரதமர் மோடி மற்றும் அவரது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு இந்திய நாடு எவ்வளவு சொந்தமோ அதே அளவிற்கு மஹமூத் ஆகிய எனக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார்.
அல்லாவின் முதல் இறைதூதரான அபுல் பாஷர் சையதினா ஆதம் இந்தியாவில் பிறந்தவர் என்று குறிப்பிட்ட அவர், இந்த இந்திய மண்ணில்தான் இசுலாம் பிறந்தது. இது, முஸ்லீம்களி தாய்நாடு, இது வெளிநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்தது என்று சொல்வது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டார். மேலும் இந்த மாநாட்டில் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு மதச் சுதந்திரம் வேண்டும். அதற்காக தனிச்சட்டம் அமலாக்கப்பட வேண்டும். இசுலாமியர்களுக்கு அரசு தனி இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும். சமூக கட்டமைப்பை பலப்படுத்தி மற்ற மதத்தினருடன் சகோதரத்துவம் தொடர வேண்டும் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.