பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பெருநாளையொட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவரையொருவர் கட்டித் தழுவியும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர். ஈத் பெருநாளையொட்டி மும்பை ஹமீதியா மசூதி திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தலைநகர் டெல்லியில் பக்ரீத் பெருநாளையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஜும்மா மசூதி திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மேலும்,டெல்லி காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள பஞ்சா செரீப் தர்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டார்.

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் பக்ரீத் பெருநாளையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் கட்டித் தழுவியும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஜம்மு நகரில் பக்ரீத் பெருநாள் பாரம்பரியச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது. மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

Exit mobile version