சர்வம் தாளமயம் படத்தில் இசை தான் இன்னொரு கதாநாயகன்!

படத்தில் மிருதங்கம் செய்யும் ஜான்சன் மகனாக வருகிறார் பீட்டர் ஜான்சன் (ஜீ வி பிரகாஷ் ). பரம்பரை பரம்பரையாக மிருதங்கம் செய்வது மட்டுமே தொழிலாக செய்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில், மிருதங்கம் வாசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் பீட்டர். அதனை நனவாக்க வேண்டும் என்ற போராட்டத்திலும் ஈடுபடுகிறார். கடைசியில் அவர் வாசிப்பாரா என்பது தான் கதை.விருதுகள் பல பெற்ற மிருதங்கம் வித்துவான் வேம்பு ஐயரிடம் மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று முயல்கிறார் பீட்டர். ஆனால் அவர் சார்ந்த ஜாதியை பார்த்து தள்ளிவைக்க முயல்கிறார் வேம்பு ஐயரின் உதவியாளர். ஆனால் தனது முயற்சியாலும் ஆர்வதலும், வேம்பு ஐயரின் மனதில் இடம்பெற்ற பீட்டருக்கு மிருதங்கம் கற்றுத்தர, தானாக முன்வருகிறார்.

கர்நாடக சங்கீதம் என்பது கச்சேரியில் வாசிப்பது, போட்டிக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாசிப்பது அல்ல என்று உள்ளவர் வேம்பு ஐயர். ஆனால் கற்றுக்கொண்டு இருக்கும் போதே வேம்பு ஐயருக்கு பிடிக்காத தொலைக்காட்சியில் மிருதங்கம் வாசித்து தோற்றுப் போகிறார் பீட்டர். இதனால் கோபம் அடைந்த வேம்பு ஐயர், பீட்டரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

கதாநாயகன் மனம் உடையும் நேரங்களில் நம்பிக்கை தரக்கூடிய காதநாயகியாக வருகிறார் அபர்ணா பாலமுரளி, குருவின் வீட்டில் இருந்து மனமுடைந்து வெளியே வரும் பீட்டரை, தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.ஜீ வி பிரகாஷ் படத்தில் அந்த மாதிரியான சம்பவம் இல்லாமல் இருந்தால் எப்படி ? அதற்காகவே, இருவருக்கும் இடையில் ஒரு கூடல் சம்பவத்தை வைத்து இருக்கிறார்கள். இப்படி ஒரு சம்பவத்தை ஏன் வைத்தார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அதற்கான ஆழமான கருத்தை அழகாக சொல்லி இருப்பார்.

காமத்தில் ஈடுபடும் போது கூட தனது மனம் இசையை தேடுகிறது என்கிறார் பீட்டர். இளைஞர்களுக்கு காமத்தை தாண்டி லட்சியம் முக்கியம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.மனித வடிவில் உள்ள குருவை தேடாதே, இயற்கையிலும் உனக்குள்ளும் உள்ள குருவை தேடி செல் என்று சொல்கிறார் கதாநாயகி. அதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு,

பயணத்தை தொடரும் பீட்டர், பல்வேறு இடங்களுக்கு பயணித்து, இசையை கற்று கொள்கிறார். தனது சிஷ்யன் எந்த தவறும் செய்யவில்லை என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் குரு, தனது சிஷ்யனை தேடி வந்து சொல்லிக்கொடுகிறார். அதற்குப் பிறகு நடக்கும்போட்டியில், சிஷ்யன் வென்றாரா இல்லையா என்பது மீதி கதை..

படத்தில் வரும் பாடல்களும் , பின்னணி இசையும், நம்மை படத்துடன் ஒன்றச் செய்கிறது… இந்த படத்தில் இசை இன்னொரு கதாநாயகன் என்று தான் சொல்லவேண்டும்.

கதைக்கு தேவையான வசனம், ரசிக்கும் படியான வேம்பு ஐயர் கதாபாத்திரம், அனுபவத்தில் பெறுவதுதான் இசை என்று புரியவைத்து, நிறைவு பெறுகிறது படம்…

இறுதி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவணம் செலுத்தி இருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும்.இசையை பற்றிய படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசை பிரம்மிக்க வைக்கிறது…படத்தின் காட்சிகளில் பல கருத்துக்களை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

 ஜாதி பாகுபாட்டை, ஒரு கோட்டில் வைத்து, பிரிவினையை காண்பிக்கும் இயக்குனர், வேம்பு ஐயர், கதாநாயகனை வீட்டுக்குள்ளும் அழைத்து சென்று சொல்லி கொடுக்கும் காட்சியில், மாறியிருக்கும் சூழலையும் காண்பித்து இயக்கியுள்ளார்…

சர்வம் தாளமயம், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய நல்ல தரமான படம் …

 

Exit mobile version