தமிழர்களின் பாரம்பரிய கலைகளான, சிலம்பாட்டம், கரகாட்டம், பறையாட்டம் போன்ற கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இசைக் கல்லூரி மாணவனைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….
தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிய பாரம்பரிய கலைகளை, இன்றைய சமூகம் மறந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. அதனை மீட்டெடுக்கும் சேவையை, மதுரையைச் சேர்ந்த இசைக் கல்லூரி மாணவர் தங்கபாண்டியன் செய்து வருவது பெருமைக்குரிய விஷயம். பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், மல்லர் கம்பம், மரக்காலாட்டம், பறையாட்டம் போன்றவற்றை, அடுத்த தலைமுறைக்கு மிகவும் நேர்த்தியாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தங்கபாண்டியன். இதற்காக, தனியாக ஓர் இடத்தை அமைக்காமல், வீட்டின் கொல்லைப்புறத்தில் மல்லர் கம்பப்பயிற்சியும், ஆற்றங்கரை ஓரத்தில் மரக்காலாட்டம், பறையாட்டம் முதலான பயிற்சிகளையும், இலவசமாக அளித்து வருவது இவரின் தனிச்சிறப்பு.
தமிழக பாரம்பரிய கலைகளை கற்பதற்காக இவரைத் தேடி வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தமிழக கலை பண்பாட்டுத் துறை மூலமாக, கலைநிகழ்ச்சிகளையும் தங்கபாண்டியன் நிகழ்த்தி வருகிறார். அரசியல், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அரசு சார்ந்த கலை நிகழ்ச்சிகளில், இவரின் விளையாட்டுகளும், இவரிடம் கற்றுக் கொண்ட சீடர்களின் விளையாட்டுக்களும், மற்றவர்களை புருவம் உயர்த்தி பார்க்க வைக்கிறது. கலை ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழர்களின் பாரம்பரிய கலையை இலவசமாக கற்றும் தருகிறார்.
கற்றுக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் குறித்த கலை நிகழ்ச்சியை, அவரது மண்ணிலேயே நடத்தி வருகிறார். அதோடு, தன்னிடம் பயிற்சி பெற்றவர்களை கௌரவித்தும் வரும் இவர், மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் முதலான வெளிநாடுகளுக்கும் சென்று, நமது தமிழ் கலையான மல்லர் கம்பம், ஒயிலாட்டம், கரகாட்டம் முதலான கலை நிகழ்ச்சிகளை தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களை கொண்டு நிகழ்த்தி, பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
நாட்டுப்புற கலைகளை தாங்கிய நம் பல்கலைக்கழக பாடத் திட்டங்களில், தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு கலைகளையும் சேர்த்து ஆனையூர் தங்கபாண்டியன் போன்றவர்கள் அதற்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் போது, எதிர்கால தலைமுறை, தமிழர் பண்பாட்டுக் கலைகளை கற்றறிந்த தலைமுறையாக மாறும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு…
Discussion about this post