ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேடிங்கை தொடங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான விராட் கோலி 8 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து களம் இறங்கிய ஏபி டிவில்லியர்ஸும், மொயீன் அலியும் மும்பையின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த நிலையிலும், மொயீன் அலி 32 பந்துகளில் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மும்பையின் லஸித் மலிங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயிண்டன் டி காக்கும் ரோஹித் ஷர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் தந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து களம் இறங்கிய வீரர்களின் கணிசமான பங்களிப்பாலும், கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளை பெற்ற மும்பை 3-வது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியையும் சேர்த்து 7 தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூருவின் பிளே ஆஃப் வாய்ப்பு கேள்வி குறியாகியுள்ளது.
Discussion about this post