தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக, சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளிக்காக 30 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்றார். சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். சிறப்பு பேருந்துகளை இயக்க தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தீபாவளி பண்டிகை நேரத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். பண்டிகை முடிந்து திரும்புபவர்களுக்காக 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயாபஸ்கர் கூறினார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தீபாவளி முன்பணம் வழங்க 45 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். நாளை முதல் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்கப்பட உள்ளதாகவும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகை 251 கோடி ரூபாய், ஐந்தாம் தேதி வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Discussion about this post