உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்பியும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பதற்றம் எகிறி இருக்கிறது.
ஒன்றல்ல… இரண்டல்ல… நூற்றுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள முன்னாள் எம்பியும் அவரது சகோதரரும் போலீசாரின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்பியும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் இருவரும் மர்ம நபர்களால் காவல்துறை முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் கடந்த 2005ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஸ்பால் என்பவரும் கடந்த 2007ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இப்படி கொலை செய்யப்பட்ட வழக்கில்தான் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பியும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோருக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. உமேஸ்பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆதிக் அகமதுவின் மகன்கள் ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் ஜான்சி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் அதில் ஆசாத் மற்றும் குலாம் இருவரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இப்படி மகன்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட சில நாட்களில்தான் முன்னாள் எம்பி ஆதிக் அகமதுவும் அவரது சகோதரும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக் ராஜ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியடித்துக் கொண்டிருக்க அப்போதுதான் அந்த பயங்கரம் நடந்தது. செய்தியாளர்களோடு செய்தியாளர்களைப் போல் ஊடுருவி இருந்த மூன்று பேர் திடீரென கைத்துப்பாக்கிகளை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டுத் தள்ளினர். இதில் ஆதிக் அகமது, அஷ்ரப் இருவரும் சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார். மகன்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே முன்னாள் எம்பியும் அவரது சகோதரரும் செய்தியாளர் சந்திப்பில் போலீசாரின் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
– செய்தியாளர் ராஜிவ் மற்றும் பா.சரவணகுமரன்
Discussion about this post