மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றம்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறுவோறுக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம், அப்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டது. தற்போது இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய சட்டத்தில் இருந்து மொத்தம் 93 மாற்றங்கள் இந்த புதிய மசோதாவில் செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்தவுடன் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. புதிய சட்டத்தின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதத் தொகை 500 ரூபாயில் இருந்து தற்போது 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதத் தொகை 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது. இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டிகளை ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாயும், அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி சென்றால், 2 ஆயிரம் ரூபாயும், வாகன ஓட்டுனர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு 100 ரூபாயாக இருந்த அபராதத் தொகை தற்போது 500ஆக உயர்த்தப்படுகிறது.

Exit mobile version