மீன்வளம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இது தொடர்பான செய்தி தொகுப்பை தற்போது காணலாம்….
நாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் இந்திய அளவில் தொடங்கப்பட்ட முதல் மீன்வள பல்கலைக் கழகம். தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு, வாணியஞ்சாவடி
உள்ளிட்ட இடங்களில் பல்கலைக் கழகத்தின் கீழ் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பிஎப்எஸ்சி, பிடெக்- மீன்வள பொறியியல், பிடெக் – ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், பிடெக் – நாட்டிக்கல் டெக்னாலஜி, பிடெக்-பயோ டெக்னாலஜி, பிடெக் – உணவு தொழில்நுட்பம், பிபிஏ – மீன்வள வணிக மேலாண்மை உள்ளிட்ட 8 பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த படிப்புகளுக்காக மொத்தம் உள்ள 330 இடங்களுக்கு சேர 6074 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் விண்ணப்பம் அதிகமாயிருப்பது மாணவர்களிடையே மீன் வளம் சார்ந்த படிப்புகளுக்கான ஆர்வத்தை வெளிகாட்டுகிறது.
மற்ற படிப்புகளை காட்டிலும் மீன்வளம், கால்நடை, வேளாண் போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக மீன்வளம் சார்ந்த படிப்புகளில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் துணை வேந்தர் பெலிக்ஸ் கூறுகிறார். இதற்கான காரணம் தரமான கல்வி வழங்கப்படுவதும், வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதும் எனவும், அதன் காரணமாகவே பெற்றோர்களும், மாணவர்களும் இதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறுகிறார்.
வழக்காமான படிப்புகளை தேர்வு செய்யாமல் மீன்வளம் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்ததற்கு காரணம், இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளும், சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகளே என்கின்றனர் இத்துறையினை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள்.
பொறியியல் போன்ற வழக்கமான படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்து காணப்படுவதற்கு சுயதொழில், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும் மீன்வளம், வேளாண்மை போன்ற படிப்பகளின் மீது மாணவர்களுக்கு ஆர்வம்
அதிகரித்திருப்பதே காரணம்.
Discussion about this post