அதிக உடல் எடை ஆஸ்துமா நோய்க்கு வழி வகுக்கும் என்கிறது ஆஸ்திரேலிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு.
ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து மறைந்த 52 நபர்களின் நுரையீரல்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், உயரத்திற்கு ஏற்ற எடையை விடவும் அதிக எடையுள்ள நபர்களுக்கு, ஆஸ்துமா நோய் தாக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் யுரோப்பியன் ரெஸ்பிராடரி ஜர்னல் – என்ற ஆய்விதழில் வெளியாகி உள்ளன.
நுரையீரல்களில் சாயங்களைச் செலுத்தி, நுண்ணோக்கிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டதில், நுரையீரலில் உள்ள 1,400 சுவாச வழிப்பாதைகள் கண்காணிக்கப்பட்டன. இதில், உயரத்தை விடவும் அதிக எடை கொண்டிருந்த பலரின் நுரையீரல்களில் உள்ள சுவாசப் பாதைகளின் சுற்றுப் புறத்தில் கொழுப்பு படிந்திருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
உடல் எடைக்கும், ஆஸ்துமா பாதிப்புக்கும் இடையில் உள்ள தொடர்பை விளக்கிய முதல் ஆய்வாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட 52 நுரையீரல்களில் 21 நுரையீரல்கள் ஆஸ்துமாவின் பாதிப்புகளைக் கொண்டிருந்தன. 16 பேர் ஆஸ்துமாவினால்தான் இறந்துள்ளனர் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதிக எடை உள்ளவர்களின் உடலில் உள்ள கொழுப்பு நுரையீரலில் படிவதாலும், அதிக உடல் எடைக்கு ஏற்ப நுரையீரல் விரிவடைவதாலும் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுகிறது. இதன் மூலம், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதால் ஆஸ்துமாவின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த
முடியுமா? – என்று புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வழி ஏற்பட்டு உள்ளது.
அதிக எடை – என்பது ஒரு தனிப்பட்ட சிக்கலாக மட்டும் இல்லாமல், பல்வேறு நோய்களுக்கும் மூல காரணமாக இருந்து வருகின்றது. அதிக உடல் எடையின் அபாயத்தை விளக்கும் மற்றொரு மிக முக்கிய ஆய்வாக இது பார்க்கப்படுகின்றது.
Discussion about this post