முதியவரை செங்கற்களால் அடித்துக் கொன்ற குரங்குகள் – குரங்குகளை கைது செய்ய போலீஸ் மறுப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. இவற்றால் பெரும் இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு வினோத துயரச் சம்பவம் பாக்பட் நகரின் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்றுள்ளது. தரம்பால் சிங் என்ற 72 வயது முதியவர், சமையலுக்காக விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.

ஒரு இடிந்த கட்டிடத்தின் அருகே விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது, கட்டிடத்தின் மேலே இருந்த குரங்குகள், அங்கிருந்த செங்கற்களை எடுத்து முதியவர் மீது வீசியுள்ளன.

அடைமழை பெய்தது போன்று அடுத்தடுத்து வந்த கற்களால், நிலை குலைந்து போன முதியவர் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.

தலை, மார்பு, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதியவர் தரம்பால் சிங்கின் உறவினர்கள், இதனை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

குரங்குகளை குற்றவாளிகளாக சேர்த்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இதனை கேட்டு, அதிர்ச்சியடைந்த போலீசார், குரங்குகள் மீது வழக்கு பதிவு செய்யவோ, கைது செய்யவோ முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

மேலும் வினோத விபத்து என வழக்கு பதிவு செய்தனர். இதனால் முதியவரின் உறவினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் இது போன்று குரங்குகள் தொல்லை இருப்பதால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

rhesus macaque எனப்படும் செம்முக குரங்குகளே இவ்வாறு அதிகம் இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வகை குரங்குகள் மனித குடியிருப்புகளுக்கு நெருக்கமாக வாழும் தன்மை கொண்டவை. இந்த குரங்கு இனம் பற்றி புறநானூற்றில் குறிப்புகள் உள்ளது என்பது கூடுதல் தகவல். எனினும் இவை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன.

 

courtesy times of india

Exit mobile version