வறுமையில் கனவு நெய்தல் என்பது வலி மிகுந்தது. தன் கனவு தொலைத்து, குழந்தைகளின் கனவிற்காக காலமெல்லாம் உழைத்து தேய்ந்து வரும் பெண்மணிகளில் ஒருவர் தான் கண்மணி. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தைதான் இவர் ஊர். வருவாய் ஆதாரமான கணவனும் உடல் நலத்தால் முடங்கிட, தன் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் கருதி கணவனின் தொழிலான, டயர்களுக்கு பஞ்சர் போடும் தொழிலை செய்து வருகிறார். பல்வேறு கஷ்டங்களை சுமந்து வாழ்க்கையில் போராடிய கண்மணி தன் 2 பெண் குழந்தைகளை படிக்க வைத்து விட்டார். தற்போது தன்னுடைய மகனை படிக்க வைக்க வியர்வை சிந்தி பாடுபட்டு வருகிறார்.
லாரி டயரை பஞ்சர் போடுவது என்பது உடல் வலிமையாக உள்ள ஆண்களுக்கு அத்தனை எளிதாக இருப்பதில்லை. தனி ஒரு பெண்ணாக லாரி டயரை நகர்த்தி இழுத்து வந்து பஞ்சர் போட்டு தன்னுடைய தொழிலை தெய்வமாக கருதி நடத்தி வருகிறார். உறவினர் இருந்தாலும் பெரிதாக இவருக்கென்று அவர்களிடம் இருந்து உதவிகள் கிட்டியதில்லை. ஆனாலும் தன்னுடைய மகனுக்கு உயர்கல்வி கொடுத்து விட்டால் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு அவன் சென்று விடுவான் என்ற கனவோடு தன் உழைப்பை கொட்டும் இவருக்கு, உதவிக்காக எங்கு சென்றாலும் எதிர்ப்பு மட்டுமே கிடைக்கிறது.
ஆண்களே செய்யத் தயங்கும் லாரி டயர் பஞ்சர் ஒட்டும் தொழிலை துணிச்சலுடன் மேற்கொண்டு, உடல் வலி மற்றும்மன வலியுடன் வாழ்வையும், சமூகத்தின் ஏளனத்தையும், எதிர்த்து போராடி வரும் கண்மணி, குடும்ப பொருளாதார சூழலால் மகனின் உயர்கல்வி தடைபட்டு விட்டதாகவும், எப்படியேனும் தன் மகள்களைப் போல மகனையும் உயர்கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் உழைப்பதாகத் தெரிவிக்கிறார்.
தன் மகனின் உயர்கல்வி தற்போது தடை பட்டு நின்றாலும் ஒற்றை ஆளாக தன் வியர்வையை சிந்தி தன் மகனை கல்வி கற்க வைக்க போராடி வரும், இந்த தாயின் நம்பிக்கை என்றுமே வீண் போகாது. கொளுத்தும் வெயிலில் சுமையுடன் நிற்கும் லாரியின் டயர்களை இன்றும் கழட்டி, நம்பிக்கையோடு மாற்றிக் கொண்டிருக்கிறார் கண்மணி. அவரின் கனவு நனவாகட்டும்.
Discussion about this post