2019 மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டது. மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலையொட்டி தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் பாஜக, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடப்பட்டு, தேர்தல் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.
பிரதமர் மோடி முன்னிலையில், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 5 ஆண்டுகளில் சாமானிய மக்களுக்கான அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க மோடி அரசு கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மோடி அரசின் 5 ஆண்டுகால ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என்று அவர் குறிப்பிட்டார்.