நாகரீக மாற்றத்தால் நவீன இயந்திரத்தை தேடி ஓடும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மத்தியில், நெல்லை பகுதியில் உள்ள சிலர், பாரம்பரிய முறையில் கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து வருகின்றனர்.
அந்த காலத்தில் கல்லால் ஆன செக்கில் இரட்டை மாடுகளை கட்டி, அதில் தேங்காய், எள் மற்றும் கடலை ஆகியவற்றை போட்டு அரைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் எண்ணெய்களையே அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட எண்ணெய்யானது ஆரோக்கியத்துடன் கூடிய உடல் நலத்தை பேணிக்காத்தது.
ஆனால், காலப்போக்கில் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட எண்ணெய் , பாக்கெட் எண்ணெய் ஆகியவற்றின் வருகையால் பாரம்பரிய கல் செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் நலிவடைந்து கிட்டதட்ட அழிந்தே போய்விட்டது.
இந்நிலையில், தற்போது நவீன முறையில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்க்களினால் ஏற்படும் வியாதிகள் பற்றி சமீபகாலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, அதன்மூலம் பாரம்பரிய பொருட்களை நாடிவருகின்றனர்.
அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் பாரம்பரிய முறையில் கல் செக்கு கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
குடைக்காளான் வடிவில் குடையப்பட்ட ஒரு கல் செக்கில், வாகை
மரத்தில் செய்யப்பட்ட உலக்கை ஒன்று பொருத்தப்பட்டு எள், கருப்பட்டி ஆகியவற்றைப் போட்டு உலக்கையில் கட்டப்பட்ட மாடுகள் மூலம் மெதுவாக இயக்கப்படும்.
இதனால் செக்கில் இடப்பட்டப் பொருள் சூடாகாமலும், அதில் உள்ள உயிர் சத்துக்கள் சிதையாமல் எண்ணெய்யானது பிழிந்து எடுக்கப்படும்.
அவ்வாறு எடுக்கப்பட்ட எண்ணெய்யானது, வடிகட்டப்படாமல் பித்தளை பாத்திரத்தில் ஊற்றி, தானாகவே தெளியும் வரை வைக்கப்படும்.
இதனால் எண்ணெய்யில் உள்ள உயிர் சத்துக்கள் சிதைவடையாமல் அப்படியே கிடைக்கும்.
கல் செக்கு மூலம் 28 லிட்டர் எண்ணெய் எடுப்பதற்கு சுமார் 3 மணி
நேரத்திற்க்கு மேல் ஆகும். இவ்வாறு எடுக்கப்படும் எண்ணெய்யானது ஒரு வருடம் வரை கெட்டுப் போகாது.
ஆனால், இயந்திரத்தின் மூலம் எண்ணெய் எடுக்கு போது, அதிகம் சூடாவதால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் சிதைவடைகிறது.
இப்பகுதியில் கல் செக்கு மூலம் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தொழிலில் வேலை, நேரம், மற்றும் உடல் உழைப்பு அதிகம் ஆனால், உற்பத்தியோ குறைவு.
எனவே, கடைகளில் வாங்கும் எண்ணெய்களை விட பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கல் செக்கு எண்ணெயின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.
ஆனால் இந்த எண்ணெய் மூலம் கிடைக்கும் சத்துக்கள் கடைகளில் வாங்கும் எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்காது.
தற்போது திருநெல்வேலியில், ஒரு சில இடங்களில் மட்டுமே இயங்கிவரும் இந்த பாரம்பரிய கல் செக்கு தொழிலுக்கு, அரசு மானியம் வழங்கி, புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
Discussion about this post