பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த விவகாரத்தில், 31ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீ டூ ஹேஷ்டேக் மூலம் மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி புகார் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட பெண்கள், அக்பர் மீது பாலியல் புகார் அளித்தனர். இதனால் தனக்கு நெருக்கடி ஏற்படவே, தனது அமைச்சர் பதவியை அக்பர் நேற்று ராஜினாமா செய்தார்.
முன்னதாக, தன் மீது பாலியல் புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது, அவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், அக்டோபர் 31ம் தேதி ஆஜராக வேண்டும் என அக்பருக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணையை நீதிமன்றம் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.