பாலியல் புகார்களில் உண்மை இல்லை – எம்.ஜெ. அக்பர்

வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் 11 பேர் மீ டூ ஹேஷ்டேக் மூலம் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர்.

அதில் அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி உள்ளிட்ட பலரும் அடங்குவர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சர் அக்பரை கடுமையாக விமர்சித்தன. குற்றச்சாட்டுக்கு அக்பர் பதில் அளிக்காவிட்டால், பதவியை விட்டு விலக வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் நைஜீரியாவில் இருந்து இன்று காலை டெல்லி திரும்பிய எம்.ஜே. அக்பர், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தம் மீதான குற்றச்சாட்டுக்கு விரைவில் உரிய விளக்கத்தை அறிக்கையாக வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஜோடிக்கப்பட்டவை எனத் தெரிவித்தார். குற்றச்சாட்டு எழுப்பியவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என கூறப்படுகிறது.

Exit mobile version