சென்னை வளசரவாக்கம் பகுதியில் நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்து சென்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்த காவல்துறையினர், இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த செய்தி தொகுப்பு.
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி வளசரவாக்கம்-ஆற்காடு சாலையில் செல்போனில் பேசியபடி சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், முத்துக்குமாரின் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆணையர் மகிமைவீரன் தலைமையிலான காவல்துறையினர், சிசிடிவி காட்சி உதவியுடன், ஆலப்பாக்கத்தை சேர்ந்த தேவ் ஆனந்த் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10 செல்போன்கள் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
புகார் அளிக்கப்பட்ட சில தினங்களில் குற்றவாளிகளைப் பிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினரை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வெகுவாகப் பாராட்டினார்.