காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏ.என் 32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் ஜோர்கட்டிலிருந்து 5 பயணிகள் உட்பட 13 பேருடன் புறப்பட்ட, இந்திய விமானப் படையின் ஏ.என் 32 ரக விமானம், 35 நிமிடங்களுக்கு பிறகு தகவல் தொடர்பை இழந்தது. காணாமல் போன இந்த விமானத்தை கண்டுபிடிக்க தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் லிபோ நகரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் M-17 ல் சென்ற விமானப்படைக் குழுவினர், சிதைந்த விமான பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். மலையில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Discussion about this post