சுகாதாரத்துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், பாஸ்கரன், வெல்லமண்டி நடராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 687 பேருக்கு பணி நியமன ஆணைகள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு சுகாதார துறையில் சிறந்து விளங்குவதை மத்திய அரசு பாராட்டியுள்ளதாக தெரிவித்தார். சுகாதாரத்துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளதாகவும், அனைத்து அரசு மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அரசு மருத்துவமனைகள் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.