சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் வார்டுகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்தார். இதற்கான பிரத்யேக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னையில் மட்டும் 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 33 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும் அவர் கூறினார். அதில் 14 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இம்மாதம் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.