முகக்கவசம் அணியாத நபர்களிடம் பேசுவதைத் தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை, மதுக்கரையில் விலையில்லா முகக்கவசங்கள், கொரோனா தடுப்புமருந்து பெட்டகம் வழங்குவதை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி இன்று காலையில் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 9 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்கள் தயாராக இருக்கின்றன என்றும் காய்ச்சல், சளி இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் கொரோனாவிலிருந்து குணமாகிவிடலாம் என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டத்துக்கு வழங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவையை, அமைச்சர் வேலுமணி தொடங்கிவைத்தார். மேலும், ஆசிரியர் தின விழாவில் பங்கேற்று, நல்லாசிரியர் விருதுபெற்ற கோவை மாவட்ட ஆசிரியர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ், ரொக்கப் பரிசு ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், 2. 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணியை, அமைச்சர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
Discussion about this post