திமுக ஆட்சியை காட்டிலும், அதிமுக ஆட்சியில் துணை மின் நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். வினா விடை நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பல்துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாட்டில் துணை மின்நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறினார். தமிழ்நாட்டில் தேவையான பகுதிகளில் துணை மின்நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார்.
பிற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் நலன் காப்பதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அவர், ராதாபுரம் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
சட்டப்பேரவை தேர்தலில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி, அவுட் ஆகாமல் 234 தொகுதிகளையும் பெறுவார்கள் என்று ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
வினா விடை நேரம் முடிவடைந்த நிலையில் பேசிய சபாநாயகர் தனபால், காகிதமில்லா சட்டமன்றம் என்ற நிலையை உருவாக்கும் வகையில் இன்றைய சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சலுக்கு பி.டி.எப். வடிவில் அனுப்பப்படும் என்று அறிவித்தார். பின்னர் முதலமைச்சரின் நீண்ட உரைக்குப் பின்னர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post