அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.
சென்னையில் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தண்ணீரை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என லாரி உரிமையாளர்களை அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். தண்ணீரை அதிக விலைக்கு விற்க மாட்டோம் என்று லாரி உரிமையாளர்களும் அரசுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக அமைச்சர் கூறினார். தண்ணீரை அதிக விலைக்கு விற்றால் அது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், அதிக விலைக்கு தண்ணீரை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்தார். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மழைநீர் சேகரிப்பு குறித்து அனைத்து வீடுகளுக்கும் சென்று ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Discussion about this post