தமிழகத்தில் கூட்டுறவு பண்டக சாலைகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கணினிமயமாக்கலுக்கும், 229 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் சார்பில், நுகர்வோர் கூட்டுறவுகள் மற்றும் மதிப்புச் சங்கிலிகள் என்னும் தலைப்பில், டெல்லியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்தியாவில் கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
திரூரில் முதல் கூட்டுறவுக் கடன் சங்கமும், காஞ்சிபுரத்தில் நகரக் கூட்டுறவு வங்கியும், திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கமும், 1904 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் 3 அடுக்குகளாகச் செயல்படும் கூட்டுறவு அமைப்புகளின் கீழ், பண்டகசாலைகள், சிறப்பங்காடிகள், நியாயவிலைக் கடைகள், மருந்தகங்கள் செயல்பட்டு வருவதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாவட்டக் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் நிதிநிலையை மேம்படுத்த, 115 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகளை மேம்படுத்த 64 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். 370 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களைக் கணினிமயமாக்க, 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டார்.
Discussion about this post