பாரத் நெட் உள் கட்டமைப்பு திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், ஊழல் நடந்து இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது விந்தையாக உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆட்சிப்பணியிட மாறுதல் பற்றி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் அறிக்கைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நிர்வாக காரணங்களுக்காக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடக்கும் நிகழ்வு தான் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு உள் அர்த்தம் கற்பித்து ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் ஆட்சிப் பணியிட மாறுதல் நடைபெறவில்லையா என்றும் ஸ்டாலினுக்கு அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். பாரத் நெட் உள் கட்டமைப்பு திட்டத்திற்கு தற்போது தான் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர், தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளியோ அல்லது விலைப்புள்ளியோ பெறப்படாத நிலையில் ஸ்டாலின் ஊழல் என்று கூறுவது விந்தையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நிர்வாக திறமை காரணமாகவே, மத்திய அரசு முதன்மையாக மாநிலமாக தமிழகத்தை அறிவித்தது என்றும், ஆனால் விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஸ்டாலின் இதை குறை கூறுவது சரியில்லை என்றும் அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post