ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரியம், கட்டமைப்புகளை கண் முன் நிறுத்தும் “மினி ராஜஸ்தான்” நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
பல்வேறு பாரம்பரிய, பண்பாட்டு கலாசாரங்களுடன் பின்னிப்பிணைந்த மாநிலம் ராஜஸ்தான். அம்மாநிலத்தின் கட்டமைப்புகள், உணவுகள், வாழ்வியல் முறைகளை அனைவரும் அறிந்திடும் வகையில் சென்னையில் ராயல் சித்ரன் என்ற மினி ராஜஸ்தான் நிகழ்வு நடைபெறுகிறது. பூவிருந்தவல்லியை அடுத்த தண்டலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி ராஜஸ்தான், குடும்பம், குடும்பமாக செல்லும் மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. உள்ளே நுழையும்போது ராஜஸ்தானில் மன்னர்களுக்கு அளிக்கப்பட்டதை போல நெங்காடா, பான்சூரி, டோல் போன்ற கருவிகளை வாசித்து, திலகமிட்டு பிரமாண்ட வரவேற்பு
அளிக்கப்படுகிறது.
உள்ளே நுழைந்ததும் ராஜஸ்தானில் உள்ள கிராமத்திற்குள் சென்றதைப் போன்ற காட்சிகள் கண் முன் விரிகின்றன. ஒரு வீட்டில் விறகு அடுப்பில் செய்யப்பட்ட சப்பாத்தி பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்து குடும்பத்துடன் தண்ணீரில் சவாரி செய்ய படகு சவாரி, ராஜஸ்தானுக்கே பெயர்போன ஒட்டக சவாரி உள்ளிட்டவை சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கிறது.
அடுத்தபடியாக, பாரம்பரிய உடைகளுடன் கூடிய ராஜஸ்தான் நடனம். பாரம்பரிய இசைக்கருவிகளுடன் 2 பெண்கள், தலையில் தீச்சட்டியுடன் ஆடிய கும்மர் நடனம், சுருள் மீசையுடன் 3 அடி உயரத்தில் ஆணும், தலையில் அடுக்கடுக்கான குடத்தை வைத்து பெண்ணும் ஆடும் பஞ்சாரா நடனம் காண்போரை கவர்ந்திழுக்கச் செய்தது. மேஜிக் ஷோக்கள் குழந்தைகளை குதூகலிக்கச் செய்கிறது.
மேலும் அந்தரத்தில் கயிற்றில் நடந்து சென்று சாகசம் செய்யும் ரசிவாலா கலை, திரைமறைவில் இருந்து பொம்மைகளை நடனமாடவைக்கும் கட்புத்திலி எனப்படும்
பொம்மலாட்டாம் போன்றவையும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளும் உள்ளே கிடைக்கிறது. ராஜஸ்தானுக்கே சென்று வந்ததைப் போன்ற உணர்வு பார்வையாளர்களுக்கு தோன்றுகிறது என்றால் அது மிகையல்ல.
Discussion about this post