ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தவற்றில் ஒன்று ஜெகரண்டா மரங்கள். 60 முதல் 80 அடி வரை வளரும் இம்மரங்கள் தமிழகத்தின் மலை வாசஸ்தலங்களின் சாலைகளை சூழ்ந்து காணப்படுகின்றன. அந்நியரை விரட்டினாலும் அழகினால் நம் மனதை கொள்ளைக் கொள்ளும் மலர்களைச் சொரியும் இம்மரங்களை மக்கள் தற்போதும் வளர்த்து வருகின்றனர்.
குறிப்பிட்ட காலங்களில் அதாவது மார்ச் முதல் மே மாதம் வரை இம்மரங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கோடை வெப்பத்தால் மற்ற மரங்களின் இலைகள் வாடிவதங்கி உதிரும் வேளையில் ஜெகரண்டா மரங்கள் கெத்து காட்டி கொத்து கொத்தாய் பூக்களை மலரச் செய்கின்றன.
இளநீல நிறத்தில் கிளைகளில் எல்லாம் பூக்களை பரப்பி இயற்கைக்கு தூது விடுவது போல் நம் இமைகளில் இறங்கி இதயத்தை வருடுகிறது. அருகில் இருந்து பார்த்தால் மட்டுமே பூக்களுக்குள் இலைகள் பூடகமாய் தெரிகின்றன. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு நீலமலை சாலையில் நிற்பதை போன்று மரத்தை நீலமலர்ப் போர்வையால் போர்த்தி நிற்கின்றன.
கோடையை வரவேற்கும் வகையிலும் கோடையைத் தணிக்க சுற்றுலா வரும் பயணிகளை குளிர்விக்கும் வகையிலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜெகண்டா மரங்கள் நீல மலர்க்கரத்தை பரப்பி நிற்கின்றன. கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய சாலை ஓரங்களைச் சூழந்து நிற்கின்ற இவ்வகை மரங்களை சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளோ செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் நீலமலர்களுடன் தங்கள் மகிழ்ச்சிளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Discussion about this post