முந்தைய ஆட்சியில் தவறான தீர்வுகளை வழங்கியவர்களிடமிருந்து தாம் பாடம் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், அந்நிய நேரடி முதலீடு உயர்வு, வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டு வரத்து விறுவிறுப்பு, உள்கட்டமைப்பு திட்டங்களில்103 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு, நடப்பு நிதியாண்டின் ஆறு மாதங்களில் 1 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல், தொழில் துறை உற்பத்தியில் மீட்சி மற்றும் பங்குச் சந்தையில் எழுச்சி ஆகிய 7 முக்கிய காரணிகளும் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு வளர்ச்சி பாதையில் வீறுநடை போடுவதை எடுத்துக் காட்டுவதாக கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தவறான தீர்வுகளை வழங்கியவர்களிடமிருந்து நான் பாடம் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சியில்தான் கோடீஸ்வரர்கள் வங்கிகளில் கடனை வாங்கி விட்டு நாட்டை விட்டு ஓட்டம் பிடித்து தலைமறைவானதாக குற்றம்சாட்டினார். வளர்ச்சியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நிச்சயம் பலனளிக்கும் என்றும், அதன் மூலம், பொருளாதாரம் மேம்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Discussion about this post